File Photo
கூகுள் வரைபடத்தில் வெளிப்படுத்தும் கொஞ்சம் பச்சை வட்டமாக இருந்தால் அதுவும் ஒரு காட்டு பிரதேசமாக ஒதுக்கப்படும் அவலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
வன ஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு என்ற இரு திணைக்களங்களும் உண்மையில் வனப்பாதுகாப்புக்கா அல்லது வன ஜீவராசிகள் பாதுகாப்புக்கா இருக்கின்றன என்ற கேள்வி எமது மக்கள் மத்தியில் பரவலாக இருக்கின்றது என்று அவர், பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரு திணைக்களங்களினாலும் அங்கு நடைபெறுகின்ற விடயங்களை பார்க்கின்ற போது அந்தக் கேள்வி நியாயமாகவே இருக்கும். 2001-2005 காலத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் அடிப்படையிலே சில விடயங்கள் நடைபெறுகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
83 காலகட்டத்தில் யுத்தம் காரணமாக பெரும் தொகையான மக்கள் இடம்பெயர்ந்து நாடு விட்டு சென்று அல்லது அந்த இடங்களிலிருந்து வேறு பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டு யுத்தம் முடிந்த பின்னர் அந்த இடங்களுக்கு மீண்டும் செல்லும் போது அவர்கள் அங்கு விடாது தடுக்கப்படுகின்றார்கள்.
அத்துடன் இந்த இரண்டு திணைக்களங்களும் இந்த மக்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளை எடுக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.