November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொதுப் போக்குவரத்து சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை!

2022 ஆம் ஆண்டளவில் இலங்கையில் பொதுப் போக்குவரத்து சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்த  நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

பயணிகளுக்கு சிறந்த மற்றும் வசதியான போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அடுத்த வருடம் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் இன்று அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக அமைச்சின் கீழ் ‘சஹசர’ திட்டத்தின் ஊடாக டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

இதன்படி, 200 மில்லியன் ரூபா செலவில் 2,000 தனியார் பஸ்களுக்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

​​டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் மக்கள் வசதிகளைப் பெறுவதற்கு மொபைல் செயலி ஒன்றும் இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

புதிய மொபைல் செயலி மூலம், மக்கள் பஸ்களின் நேர அட்டவணை மற்றும் பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விரிவான தகவல்களைப் பெற முடியும் என தெரிவித்துள்ளார்.

அத்தோடு இலத்திரனியல் கட்டண அட்டை முறையை அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் வன்னியாராச்சி கூறியுள்ளார்.