July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை இராணுவத்தின் பதவிநிலை பிரதானியாக விக்கும் லியனகே நியமனம்!

இலங்கை இராணுவத்தின் 59 ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தின் 58 ஆவது பதவி நிலை பிரதானியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா ஓய்வு பெற்றதையடுத்து அந்த வெற்றிடத்திற்கு மேஜர் ஜெனரல் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரின் பரிந்துரைகளுக்கு அமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ செய்திப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கான நியமனக் கடிதம் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் இராணுவ தலைமையகத்தில் இன்று காலை (07) வழங்கப்பட்டது.

கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, இதற்கு முன்னர் இராணுவத்தின் தொண்டர் படையணியின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றியுள்ளார்.

மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ஒரு பயிலிளவல் அதிகாரியாக 1986 இல் இலங்கை இராணுவ நிரந்தர படையின் பாடநெறி 26 இல் இணைந்தார்.

மேலும் தியத்தலாவவில் உள்ள இலங்கை இராணுவ கல்லூரி மற்றும் பாகிஸ்தான் இராணுவ கல்வியியற் கல்லூரி ஆகியவற்றில் அடிப்படை இராணுவப் பயிற்சிகளைப் பெற்றுள்ளார்.

பயிலிளவல் அதிகாரிகளுக்கான பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவுடன் அவர் இரண்டாவது லெப்டினன்ட் பதவியில் நியமிக்கப்பட்டதோடு பின்னர் கஜபா படையணியில் இணைத்து கொள்ளப்பட்டார்.

மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவின் நியமனம் இன்று (07) முதல் அமுலாகும் என இராணுவ செய்திப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

This slideshow requires JavaScript.