May 28, 2025 10:03:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

1,750 ஹெக்டயார் மகாவலி காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி

மகாவலி அதிகார எல்லைக்குட்பட்ட காணிகளை உணவுப் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட வணிக விவசாயக் கருத்திட்டங்களுக்காக நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொவிட் 19 தொற்று நிலைமையில் உணவு இறக்குமதிக்காக அந்நிய செலாவணி வெளிநாடுகளுக்கு இழுத்துச் செல்லப்படுவதால், நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் எதிர்மறை விளைவுகளைக் குறைக்கும் நோக்கில், உள்நாட்டில் பயிரிடக்கூடிய அத்தியாவசிய உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கு முதலீட்டாளர்களை ஊக்குவிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதேபோன்று, உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், கால்நடைத் தீவனங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு, கொள்கைப் பிரகடனத்தின் நோக்கமாக உள்ளது.

அதற்கமைய, தேசிய போசாக்கு மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட வணிக விவசாயக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மகாவலி பிரதேசங்களில் அமைந்துள்ள 1,750 ஹெக்டயார் காணிகளை முறையான பொறிமுறையைக் கையாண்டு, தெரிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.