வவுனியா வடக்கு பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் 9 மேலதிக வாக்குகளால் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் 9 மேலதிக வாக்குகளால் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ச.தணிகாசலம் தலைமையில் இன்று (12) இடம்பெற்றது.
கடந்தமாதம் இடம்பெற்ற அமர்வில் சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில் அது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு தோற்கடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்றைய தினம் அது மீளவும் முன்வைக்கப்பட்டது. இதன்போது மக்கள் சார்பான வேலைத்திட்டத்திற்கு போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என பல்வேறு உறுப்பினர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக இந்த வரவு- செலவுத்திட்டத்தினை தோற்கடிக்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வி.சஞ்சுதன் கருத்து தெரிவித்தார்.
அவரது கருத்தினை தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் முகுந்தன் வழிமொழிந்தார்.
அதற்கமைய அநேக உறுப்பினர்களின் எதிர்ப்பினால் வரவு – செலவு திட்டம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
அந்த வகையில் வரவு- செலவுத்திட்டத்திற்கு எதிராக தமிழர் விடுதலை கூட்டணி, பொதுஜன பெரமுன, ஜக்கிய தேசிய கட்சி, சுதந்திரக் கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சுயேட்சை குழு ஆகியவற்றை சேர்ந்த 17 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
ஆதரவாக தமிழ்க் கூட்டமைப்பை சேர்ந்த 8 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்திருந்தனர்.
இதனால் 9 மேலதிக வாக்குகளால் 2022 ஆம் ஆண்டிற்கான சபையின் வரவு- செலவுத்திட்டம் இரண்டாவது முறையாகவும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தது.
இந்நிலையில் உள்ளூராட்சி சட்டங்களின் படி பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான தேர்தல் விரைவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.