July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்ற ஜனநாயகம், கருத்து சுதந்திரம் கேள்விக்குறி; அனுரகுமார திசாநாயக

பாராளுமன்றத்தில் ஒரு குழுவிற்கோ அல்லது தனி நபருக்கோ சந்தேகத்துடன், அச்சத்துடன் பாராளுமன்றத்திற்கு வர நேர்ந்துள்ளது என்றால் பாராளுமன்ற ஜனநாயகம், கருத்து சுதந்திரம் எங்கு சென்று முடியும் என்பதை சிந்திக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் யாரேனும் ஒரு உறுப்பினருக்கு நேர்ந்துள்ள நிலை இதுவென்றால், ஏதேனும் ஒரு விடயத்தை உரையாற்றிய பின்னர் அவர்களை தாக்க முயற்சிப்பதென்றால், அவர்கள் ஒளிந்து இரகசியமாக பாராளுமன்றத்தை விட்டு வெளியேற நேர்கின்றது என்றால், சபையை விட்டு வெளியேற சபாநாயகர் செல்லும் கதவை பயன்படுத்த வேண்டியுள்ளது என்றால், தமது வாகனங்களை விட்டு வேறு வாகனங்களில் வெளியேற நேர்ந்துள்ளது என்றால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்பதும், அவர்கள் நிலைமை அச்சுறுத்தலில் உள்ளது என்பதையுமே இது வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆணைக்குழு, கலந்துரையாடல்கள் என்பவற்றை நாம் இதற்கு முன்னர் பார்த்துள்ளோம்.குற்றப்புலனாய்வு பிரிவை வைத்தும் இதற்கு முன்னர் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது.ஆனால் அவர்களின் அறிக்கையில் கூட எந்த உண்மைகளும் வெளிப்படுத்தவில்லை. குறைந்தபட்சம் குற்றமிழைத்த உறுப்பினர் இந்த சபைக்கு ஒரு வாரத்திற்கோ அல்லது இரண்டு வாரங்களுக்கோ வரமுடியாதென்ற கட்டளையை கூட பிறப்பிக்கவில்லை என்றார்.