“சிலிண்டர்களில் எரிவாயு கசிவு உள்ளதா என்பதை பரிசோதிக்க செய்ய வேண்டாம்” என்று எரிவாயு விபத்துக்கள் தொடர்பில் ஆராயவென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையில் அண்மை காலமாக இடம்பெற்ற எரிவாயு விபத்துக்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட 8 பேர் கொண்ட நிபுணர் குழு அது தொடர்பான அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
நாட்டில் 2021 ஜனவரி 1 முதல் டிசம்பர் 5 வரை சமையல் எரிவாயு தொடர்பான மொத்தம் 458 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இந்த குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும் இதில் சுமார் 430 சமையல் எரிவாயு தொடர்பான சம்பவங்கள் நவம்பர் 29 முதல் டிசம்பர் 5 வரையான காலத்தில் பதிவாகியுள்ளதாக குழுவின் தலைவர் மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் சாந்த வல்போலகே தெரிவித்தார்.
அவற்றில், 174 சம்பவங்கள் எரிவாயு அடுப்பில் வெடித்து சேதம் அடைந்தமை தொடர்பாகவும், 227 சம்பவங்கள் எரிவாயு கசிவு தொடர்பாகவும் பதிவாகியுள்ளன.
அத்தோடு 6 சம்பவங்கள் ரெகுலேட்டர் சேதமடைந்தமை தொடர்பாகவும் 20 சம்பவங்கள் எரிவாயு குழாய் சேதமடைந்தமை தொடர்பாகவும் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.