பாராளுமன்றத்தில் இன்று, வரவு செலவுத் திட்ட விவாதத்தை புறக்கணித்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ‘மாற்றுப் பாராளுமன்றம்’ என்ற பெயரில் கூட்டம் நடத்தியுள்ளனர்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தாம் பாராளுமன்றத்தில் இன்றைய விவாதத்தில் உரையாற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பில் உரையாற்றியுள்ளதுடன், இதனை சமூக வளைத்தளங்களின் ஊடாக நேரடியாக ஒளிபரப்பியுள்ளனர்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் வீடமைப்பு, சுற்றுலாத்துறை உள்ளிட்ட அமைச்சுகளுக்காக ஒதுக்கீடுகள் தொடர்பில் விவாதம் நடத்தப்படவிருந்த நிலையில், தாம் அதில் கலந்துகொள்ளாது அதனை புறக்கணித்துள்ளனர்.
தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரையில் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள மாட்டோம் என்று அறிவித்துள்ள அவர்கள், ‘ஒடுக்குமுறைகளுக்கு எதிரான எதிர்க்கட்சியின் பாராளுமன்றம்’ என்ற பெயரில் மாற்றுப் பாராளுமன்ற முறையொன்றை அமைத்து அதில் உரையாற்றியுள்ளனர்.