பாராளுமன்றத்தில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சிரேஷ்ட உறுப்பினர்களை கொண்ட குழுவொன்றை அமைப்பதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.
இந்த வாரத்திற்குள் இந்த குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று சபையில் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர் மனுஷ நாணயக்காரவுக்கு உரையாற்றுவதற்காக மேலதிக நேரத்தை வழங்காமை தொடர்பில் சபையில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையே முறுகல் ஏற்பட்டதுடன், ஆளும் கட்சியினர் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முயற்சிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இதனை தொடர்ந்து சனிக்கிழமையும் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. இதனையடுத்து சபையில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறியிருந்தனர்.
இதேவேளை தமது பாதுகாப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் இதனால் பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை புறக்கணிப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே குறித்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்த குழுவை அமைக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்த சபாநாயகர், சபையின் கௌரவத்தை பாதுகாப்பதற்காக அனைத்து எம்.பிக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.