இலங்கையின் பல நகரங்களுக்கு காற்றின் தரத்தை அளவிடும் திட்டத்தை விரிவுபடுத்துமாறு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது, கொழும்பு, கண்டி, குருநாகல், கம்பஹா மற்றும் காலி போன்ற நகரங்களில் பகலில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதனால் வளிமண்டலத்தில் கரியமில வாயு அதிகரிப்பதற்கு காரணமாகியுள்ளதாக அவர் கூறினார்.
எதிர்வரும் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள சுற்றாடல் வேலைத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த பணிப்புரை விடுத்தார்.
இதன்படி, குறித்த திட்டம் அடுத்த ஆண்டு முதல் விரிவுபடுத்தப்படும் என்று சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
அத்தோடு காற்றின் தரத்தை சரிபார்க்க தேவையான நவீன உபகரணங்களை வாங்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
காற்றின் தரத்தை பரிசோதிக்கும் போது அது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, கொழும்பில் நெரிசல் மிகுந்த பகுதிகளில் வளிமண்டலத்தின் தரத்தை அளவிடும் கருவிகளை நிறுவுவதற்கு இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.