July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தன்னிச்சையாக நிதியை செலவிடும் உள்ளூராட்சி சபைகளை கலைப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்வு!

வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்றாமல் தன்னிச்சையாக நிதியை செலவழித்ததாக கூறப்படும் பல உள்ளூராட்சி மன்றங்களை கலைப்பது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆண்டுகளில் வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றாமல் ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்ய வாய்ப்பில்லை என்பதால் சட்டத்தை மீறும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக எதிர்வரும் நாட்களில் ஆளுநர்கள் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர்களை அமைச்சின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிற்கு அழைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பணத்தை செலவு செய்வது மோசமான முன்னுதாரணம் என கூறியுள்ள அவர், இந்த கூட்டத்தின் போது உள்ளுராட்சி மன்றங்களின் ஏனைய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிட்டார்.

ஊழல்கள் இடம்பெறாத வகையில் உள்ளூராட்சி மன்றங்களை முறைகேடுகள் இன்றி நடத்துவதற்கான அனைத்து திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே அம்பலாங்கொட நகர சபையும் 2021 ஆம் ஆண்டுக்கான நிதியை வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றாமல் செலவு செய்துள்ளதாக அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிய வந்துள்ளது.