July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒரே பார்வையில்: இலங்கையின் கொரோனா நிலவரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 9,081 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினத்தில் இன்று மாலை 7 மணி வரையில் 211 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொட மீன் சந்தை ஊடாக தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 6,000 ஐ கடந்துள்ளது.

கடந்த நான்கு வார்ங்களில் 6,000 ற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் இலங்கையில் கடந்த 9 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரில் 4,075 பேர் இது வரையில் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கொவிட் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி  தற்போது, 32 வைத்தியசாலைகளில் 4987 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேவேளை நாடு பூராகவும் தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய சுமார் 35,000 பேர் வரையிலானோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

73 பேர் வீடு திரும்பினர்

முப்படையினரால் நடத்தப்படும் 08 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 73 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை, தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து 58,396பேர் வீடு திரும்பியுள்ளதுடன், 75 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது 7530 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

இதேவேளை, இலங்கையில் ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பிசிஆர் பரிசோதனைகள் முதல் தடவையாக நேற்று  நடத்தப்பட்டுள்ளன.

வழமைக்கு திரும்பியது நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் இன்று  தனது வழமையான நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தொற்று நீக்கும் நடவடிக்கைகளுக்காக கடந்த இரண்டு நாள்கள் நாடாளுமன்றம் மூடப்பட்டிருந்தது.

புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள் 9 மணித்தியாலம் திறப்பு

புறக்கோட்டையில் அமைந்துள்ள மொத்த விற்பனை நிலையங்களை தினந்தோறும் 09 மணித்தியாலம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 5 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு நூற்றுக்கு 50 சதவீதமான ஊழியர்களை கொண்டு மொத்த விற்பனை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை அமர்வு ஒத்திவைப்பு

கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை அடுத்து எதிர்வரும் 31ஆம் திகதி வரையிலும் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கம்பஹாவில் 220 பேர்

நேற்று  நாட்டில் அடையாளம் காணப்பட்ட 457 ​தொற்றாளர்களுள் 220 பேர், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 183 பேர், களுத்துறையில் 16, காலி மாவட்டத்தில் 2 பேர், ஹம்பாந்தோட்டையில் இருவர், இரத்தினபுரியில் 5 பேர், கண்டி மற்றும் மாத்தளையில் தலா ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் 10 தொற்றாளர்களும் பதுளையில் 5 பேரும் குருநாகலில் 3 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்கு காலியில் 3 வைத்தியசாலைகள்

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க காலி மாவட்டத்தில் 3 வைத்தியசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

ஹிக்கடுவ- ஆரச்சிகந்த வைத்தியசாலை, அம்பலாங்கொட, கரந்தெனிய ஆகிய வைத்தியசாலைகள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதுவரை காலி மாவட்டத்தில் 4,837 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள. அதில் 54 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தவிசாளரின் சாரதிக்கு கொ​ரோனா

பாணந்துறை நகர சபையின் தவிசாளர் நந்தன குணதிலகவின் சாரதி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார.

இதனை, பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர், தினமும் அதிகாலை, பேலியகொடை மீன்சந்தைக்கு வாடகை வாகனத்தை செலுத்தி வந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டக்கொடை நகரம் மூடப்பட்டது

தலவாக்கலை – வட்டக்கொடை யொக்ஸ்போர்ட் தோட்டத்தில், ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, வட்டக்கொடை நகரிலுள்ள சகல வர்த்தக நிலையங்களும் இன்று (28) நண்பகல் 12 மணிமுதல் நான்கு தினங்களுக்கு மூடப்பட்டுள்ளன.

இதனை, கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.

பயணிகளுக்கு விசேட அறிவித்தல்

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் பயணிக்கும் பயணிகள், தாங்கள் பயணிக்கும் பஸ்ஸின் இலக்கத்தைக் குறத்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பஸ்ஸின் தகவல்களை பயணிகள் பார்க்கும் வகையில், பஸ்ஸின் இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கங்களை, பஸ்ஸில் ஒட்டிவைக்குமாறு, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, பஸ் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரொருவர் பஸ்ஸொன்றில் பயணித்திருந்தால், அவருடன் பயணித்திருக்கும் மற்றைய பயணிகளை கண்டறிவதற்கு, இது இலகுவாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடியில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டன

காத்தான்குடியிலுள்ள அனைத்து பள்ளிவாயல்களையும், இன்று (28) தொடக்கம் மூடுவதற்கு காத்தான்குடி பிரதேச கொரோனா வைரஸ் தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது.

காத்தான்குடி பிரதேச கொரோனா தடுப்பு செயலணியின் அவசரக் கூட்டம், காத்தான்குடி சுகாதார அலுவலகத்தில், இன்று (28) நடைபெற்ற போதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிகை அலங்கார நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கும் ஹோட்டல்கள், சிற்றுண்டிச் சாலைகளில் அமர்ந்திருந்து உணவருந்துவதை நிறுத்தி, பார்சல் செய்து கொடுக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு புது நோட்டீஸ்

சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் வீடுகளில், இன்று அமுலுக்கு வரும் வகையில் புதிய அறிவித்தல் ஒட்டப்படவுள்ளது.

ஏற்கெனவே ஒட்டப்பட்டு வந்த அறிவித்தலை, சில குடும்பங்கள் புறக்கணிப்பதாக தெரியவந்துள்ளது எனத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, ஏற்கெனவே ஒட்டப்பட்ட அறிவித்தல் நோட்டீஸுக்கும் மேலதிகமாக, இன்னொரு நோட்டீஸ் ஒட்டப்படவுள்ளதாக கூறினார்.

புதிதாக ஒட்டப்படும் நோட்டீஸில், பிரதேச பொலிஸ் நிலைய இலக்கம், மருத்துவ சுகாதார அதிகாரிகளின் இலக்கம், பிரதேச செயலக இலக்கம் ஆகியவை உள்ளடக்கப்படுள்ளன.

இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டு வீடுகளில் இருந்து யாரும் வெளியே செல்லவோ அல்லது உள்ளே நுழையவோ முடியாது என்றும் அவர் கூறினார்.

இதையும் மீறி வெளியே செல்பவர்கள் அல்லது உள்ள நுழைபவர்கள், பிடியாணை இன்றி உடனடியாக கைது செய்யப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும், அவசரத்தேவைகளுக்காக, உரிய அதிகாரிகளுக்கு அறிவித்த பின்னர், வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியும் என்றும் அவர் கூறினார்.

யாழில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை

யாழ்ப்பாணத்தில், சுகாதார நடைமுறையைப் பின்பற்றாத நிலைமை காணப்படுவதாக, யாழ். மாவட்டப் பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன தெரிவித்தார்.

யாழ். மத்திய பஸ் நிலையத்தில், இன்று (28) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொறுத்த வரைக்கும், சுகாதார திணைக்களத்தல் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை மக்கள் பின்பற்றுவதாக தெரியவில்லையெனவும் அவர்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்று தனக்கு புரியவில்லையெனவும் அவர் கூறினார்.

வீதிகளில் முகக்கவசம் அணியாது பயணிக்கிறார்களெனத் தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்தில் தற்போது சிலர் தொற்றுக்குள்ளாகி இருக்கிறார்களெனவும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியமாகுமெனவும் சுட்டிக்காட்டினார்.

பொத்துவிலில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு

பொத்துவில் பிரதேசத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் பொத்துவில் பிரதேசசெயலாளர் இராசரெத்தினம் திரவியராஜ் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து, பொத்துவில் பிரதேசத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதெனவும் கூறினார்.