July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெலிக்கடை சிறைச்சாலை காணியை குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்!

வெலிக்கடை சிறைச்சாலையில் 42 ஏக்கர் காணியை அபிவிருத்தி திட்டத்திற்காக நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் அரசாங்கத்திற்கு 26,300 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைய, வெலிக்கடை சிறைச்சாலையை அதன் இடத்தில் இருந்து அகற்றி, ஹொரணை, மில்லேவ பிரதேசத்தில் 280 ஏக்கர் காணியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலையின் தலைமையகத்தை பத்தரமுல்லையிலும், சிறைச்சாலையின் உத்தியோகபூர்வ குடியிருப்புகளை மாலபேயிலும் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த மூன்று திட்டங்களுக்கான செலவை வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள காணியை குத்தகைக்கு கொடுப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள வளாகத்தில் ஹோட்டல் உட்பட பல்வேறு முதலீட்டுத் திட்டங்களுக்கும் இடம் வழங்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மதிப்பீடுகளின் படி மில்லேவயில் நிர்மாணிக்கப்பட உள்ள இந்த மூன்று திட்டங்களுக்கும் 3,147 மில்லியன் ரூபா செலவாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில், வெலிக்கடை சிறைச்சாலையை மில்லேவயில் நிர்மாணிக்கப்படும் சிறைச்சாலை கட்டடத் தொகுதிக்கு மாற்றுவதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ பணிப்புரை விடுத்திருந்தார்.

இதற்கமைய புதிய சிறைச்சாலையின் நிர்மாணப் பணிகள் 2024 ஆம் ஆண்டில் நிறைவடையவுள்ளன.