யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் மேல் வெடி வைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மானிப்பாய் – கைதடி வீதியில், உரும்பிராய் பகுதியில் சனிக்கிழமை (04) இரவு இடம்பெற்ற ஹயஸ் மற்றும் துவிச்சக்கர வண்டி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த உரும்பிராய் அன்னங்கை பகுதியை சேர்ந்த குணசிங்கம் சுதன் (வயது 45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதனை அடுத்து அங்கு கூடியோர் மல்லாகத்தை சேர்ந்த ஹயஸ் சாரதியை பிடித்து நயப்புடைத்துள்ளனர். அதனால் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பில் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது பெருமளவானோர் அங்கு கூடி அமைதியின்மையை ஏற்படுத்தி இருந்தனர்.அதனால் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதனை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த நபரின் சடலத்தை வைத்திய சாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்ததுடன் , வாகன சாரதியை கைது செய்து, வாகனத்தையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்