July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வடக்கில் போதை வியாபாரத்தைக் கண்டறிய புலனாய்வுப் பிரிவைக் களமிறக்கவும்’

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் வியாபாரிகள், போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிய தனியான புலனாய்வுப் பிரிவொன்றை களமிறக்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

வடக்கில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு என்ற பெயரில் இராணுவ சோதனைச் சாவடிகள் போடப்பட்டுள்ளதாகவும், அதனால் மக்கள் அவலங்களை சந்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் மன்னார் தீவைச் சுற்றி கடல் இருக்கின்றது. கடற்படைக்குத் தெரியாமல் எப்படி மன்னார் தீவுக்குள் போதைப்பொருட்களைக் கொண்டுவர முடியும்?

அது மாத்திரமல்லாமல் இந்த சோதனைச் சாவடிகளில் மக்கள் அவலப்படுகிறார்களே தவிர, போதை வியாபாரிகள் தமது வியாபாரங்களைச் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

கொழும்பில் பல இடங்களில் போதைவஸ்து பிடிபடுகின்றது. அண்மையில் மாரவில வீதியில் இலங்கையில் மிகப் பெரிய தொகை போதைவஸ்து பிடிபட்டது.

ஆனால், அங்கு எந்தவொரு இடத்திலும் சோதனைச் சாவடி அமைத்து மக்களை கஷ்டப்படுத்த வில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.