July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வியாழன் நள்ளிரவு முதல் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு

இலங்கையில் தீவிரமடைந்துவரும்  கொரோனா வைரஸ் பரவலையடுத்து மேல் மாகாணம் முழுவதிலும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா  தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரையில் கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஊரடங்கு அமுலில் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஏற்கனவே ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் மறு அறிவித்தல் வரையில் அது தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணம் முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் முழுநேர ஊரடங்கு அமுலில் இருக்கும் என்பதால், அந்த மாகாணத்தில் ஏற்கனவே ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் உள்ளவர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக வெளியில் செல்வதற்கு வியாழக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையில் அனுமதி வழங்கப்படும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாகவே அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், இதனால் இங்குள்ளவர்களை இந்த மாகாணத்தை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என்று  இராணுவத் தளபதியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டத்தால் உயர்தரப்பரீட்சைக்கு பாதிப்பு இல்லை

மேல் மாகாணத்தில் நாளை நள்ளிரவு முதல் அமுல்படுத்தவுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினால் கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு எவ்வித நெருக்கடி நிலையும் ஏற்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பொது போக்குவரத்து சேவைகள் பாதுகாப்பான முறையில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பரீட்சைகள் நிறைவு பெறும் வரை சேவைகளை தொடர்ந்து சிறப்பான முறையில் முன்னெடுக்குமாறு புகையிரத திணைக்களம் மற்றும் அரச போக்குவரத்து சேவைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு போக்குவரத்து சேவையினை வழமைப் போன்று முன்னெடுப்பதாக அரச பொதுபோக்குவரத்து துறையினர் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

ஆகவே ஊரடங்கு சட்டத்தினால் பரீட்சார்த்திகளுக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்படாது என்றார்.