முஸ்லிம் பள்ளிவாசல் நிர்வாகிகள் தமது பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைகளுக்கேற்ப பள்ளிவாசல்களில் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ளுமாறு முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு வெளியிட்டுள்ள வழிகாட்டல்களிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் சூழ்நிலையில் பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களின் வழிகாட்டல்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முஸ்லிம் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கான வழிகாட்டல்களில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
‘நாட்டில் கொவிட்-19 நோய்த் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதை அவதானிக்கின்றோம்.
உங்களது பிரதேச சுகாதார அலுவலகத்தில் இருந்து பள்ளிவாசல்களை உடனடியாக மூடுங்கள் என்று அறிவிக்கப்பட்டால், நீங்கள் உடனடியாக பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதைத் தவிர்த்து, மூடிவிட வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் வேறு யாருடைய ஆலோசனைகளையும் எதிர்பார்க்கத் தேவையில்லை.
பல சந்தர்ப்பங்களில் எமது அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்புகள் கிடைக்கப் பெறுகின்றன. எனினும், அவ்வாறு விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு பிரதேசத்து நிலைமைகளைப் பொருத்து, பொது சுகாதார பரிசோதகர்களின் வழிகாட்டல்களுடன் தீர்மானங்களை எடுக்கவும்.
இவ்விடயத்தில் எவ்வித கால தாமதங்களையும் செய்ய வேண்டாம். அது நாட்டு நலனை பாதிப்பதாக அமைந்துவிடும். எங்களோடு ஒத்துழைத்து, செயற்பட்டு வரும் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.’என்றார்