யாழ். மாவட்டம் மாதகல் காணிகளை கடற்படைக்கு வழங்குவதாக நான் ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளுநர் கடற்படைக்கு மாதகல் காணிகளை வழங்குவதாக தெரிவித்து சில ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் இது தொடர்பில், இன்று தனியார் நிறுவனத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆளுநர் இதனை தெரிவித்தார்.
இதன்போது, நேற்றைய தினம் நான் காணி உரிமையாளர்களுடன் பேசுவதாக வெளியான செய்தி பிழையானது.
இன்றைய தினமே முதன்முதலாக காணி உரிமையாளர்களுடன் நான் நேரடியாக கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காணி உரிமையாளர்கள் உடன் பேசி காணியின் உறுதிகளை சரி பார்த்து, காணி உரிமையாளர்களின் நிலைப்பாடுகளை அறிந்த பின்னரே முடிவுகளை எடுக்க முடியும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காணிகள் தொடர்பில் காணி உரிமையாளர் மற்றும் உத்தியோகத்தர்களை தனித்தனியாக கலந்துரையாடிய வடக்கு மாகாண ஆளுநர் காணி உரிமம் தொடர்பில் கேட்டறிந்தார்.
சிலருடைய காணிகளுக்கான சட்டரீதியான உரிமங்கள் இல்லாமை ஆளுநரால் அவதானிக்கப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் சங்கானை மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர்களை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.