(FilePhoto)
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்டக் கல்லூரி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் கற்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கல்வி அமைச்சு மற்றும் நான்கு இராஜாங்க அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் கல்வி அமைச்சரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்வியில் பின்னடைவில் இருப்பதாக பல்வேறு கருத்துக்கள் பொதுவாக முன்வைக்கப்படுகின்றது. இதனால் அவர்களுக்கு உயர்கல்வியை தொடரக் கூடிய வகையில் வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, அறிவுபூர்வமாக இருப்பதாலேயே இவர்கள் பாராளுமன்றத்திற்கு வருகின்றனர். தேர்தலில் வெற்றி பெறுவது என்பது எந்தளவுக்கு கடினமானது என்று தெரியும்.
அத்துடன் 5 வருடங்கள் பாராளுமன்றத்தில் இருக்கும் போது எந்தளவுக்கு அவர்களின் அறிவு வளர்ச்சி இருக்கும். இதனால் அவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த பாராளுமன்றத்தில் சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 1970 காலப்பகுதியில் பரீட்சை இன்றி சட்டக் கல்லூரிக்கு நுழைய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அப்போது இருந்த பாராளுமன்ற செயலாளர் அதனை ஏற்படுத்தியிருந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியே மஹிந்த ராஜபக்ஸவும் சட்டக் கல்லூரி செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.