January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழ் முற்போக்குக் கூட்டணி’ அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது

தேர்தல் ஆணைக்குழுவினால், ‘தமிழ் முற்போக்குக் கூட்டணி’ பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி ‘டோர்ச் லைட்’ (மின்சூள்) சின்னம் கூட்டணியின் அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் செயலாளர் சந்திரா சாப்டருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

2015 ஜூன் 3 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில், ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகளின் தலைவர்களால் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது.

”கூட்டணி ஆரம்பிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளை கடந்த நிலையில், இடையில் இரண்டு பாராளுமன்ற தேர்தல்கள், ஒரு ஜனாதிபதி தேர்தல், ஒரு உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆகியவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு, இந்நாட்டின் தேசிய அரங்கில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் இயக்கமாக வளர்ந்து, இன்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம்”

என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.