இலங்கையில் வெடிப்பது எரிவாயு சிலிண்டர்கள் அல்ல எனக் கூறி, அடுப்புகளின் மீது குற்றம்சாட்டுவதன் ஊடாக அரசாங்கம் யாரைப் பாதுகாக்க முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் எரிவாயு கசிவுடன் தொடர்புடைய வெடிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இதுவரையில் 30 க்கும் அதிகமான வெடிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு வெடிப்புகளால் நாட்டு மக்களின் உயிர்களுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
எனினும், அரசாங்கம் வழமை போன்று இப்பிரச்சினையையும் வேறு தளத்திற்கு கொண்டுசெல்ல முயற்சிக்கிறதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம்சாட்டியுள்ளார்.