இலங்கையில் அனைத்துப் பாடசாலைகளினதும் 2022 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைவாக 2021 ஆம் ஆண்டின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளதாக இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவினால் கடந்த 26 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, 2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதியும், க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரையும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 1 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளது.
இதற்கமைய, 2021 க.பொ.த சாதாரண தர மாணவர்களின் கல்வியாண்டு 2022 ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதியுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், அந்த மாணவர்களுக்கான பாட விதானங்கள், கருத்தரங்குகள் அல்லது வேறு மாற்று வழிகள் மூலம் கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
தற்போதைய சுற்றறிக்கையின் படி வகுப்புகளுக்கு உரிய பாடத்திட்டங்களை பூர்த்தி செய்ய போதிய கால அவகாசம் உள்ளதால், பாடத்திட்டங்களை முழுமையாக உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2021 கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அனைத்து பாடசாலைகளும் டிசம்பர் மாதம் 23 முதல் 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு க.பொ.த உயர்தரப் பரீட்சை மையங்களாக செயற்படும் அனைத்துப் பாடசாலைகளும் 2022 பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 7 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த பரீட்சைகளின் போது ஆரம்ப பிரிவு வகுப்புகளுக்கு விடுமுறை வழங்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சித்திரை புத்தாண்டுக்காக ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு முஸ்லிம்களுக்கான நோன்பு காலங்களில் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் மே மாதம் 3 ஆம் திகதி வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளது.
அத்தோடு 2022ம் ஆண்டுக்கான பாடசாலை கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சு சுற்றறிக்கையில் கூறியுள்ளது.