July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கஞ்சாவை ஏற்றுமதி செய்ய யோசனை!

இலங்கையில் கஞ்சா ஏற்றுமதியை விரைவில் சட்டபூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர், சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை, வரவு செலவு திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மாதத்திற்குள் கஞ்சா ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ தேவையை அடிப்படையாக கொண்டு கஞ்சா ஏற்றுமதியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பாரம்பரிய மருத்துவம் சட்டபூர்வமாக்கப்பட்டு வருவதாகவும், கஞ்சாவால் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி, உள்ளூர் மருந்து உற்பத்திக்கு தேவையான மூலப் பொருளை நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சுதேச மருத்துவ முறையின் மூலம் அந்நியச் செலாவணியை பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கஞ்சா பயிர்ச் செய்கையை சட்டபூர்வமாக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே அரசாங்கத்திடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

கஞ்சா பயிர்ச் செய்கையை சட்டபூர்வமாக்குவது அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வுகளை கொண்டு வருவதோடு, பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் எனவும் அவர் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.