November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிட்டிஷ் மகாராணியின் தலைமையில் இருந்து விடுபட்டு குடியரசானது “பாபடோஸ்”

(Photo : Twitter /Mia Amor Mottley)

பிரிட்டனின் காலனித்துவத்தின் கீழ் இருந்த கரீபியத் தீவு நாடான பாபடோஸ், தற்போது பிரிட்டிஷ் மகாராணியின் தலைமையில் இருந்து விடுபட்டு, குடியரசு நாடாக மாற இருக்கிறது.

கடந்த 400 ஆண்டுகளாக பிரிட்டனோடு பாபடோஸூக்கு இருந்த ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

கடந்த ஆண்டு நாட்டின் தலைவர் என்று பொறுப்பில் இருந்து பிரிட்டிஷ் மகாராணியை நீக்குவது குறித்து பாபடோஸ் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து நாட்டின் முதல் ஜனாதிபதி தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது.

கரீபியத் தீவுகளில் ஒன்றான பாபடாஸ், 55 வருடங்களுக்கு முன்பு ஒருகாலத்தில் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து சுதந்திரம் பெற்ற போதிலும், அதன் தலைவராக பிரிட்டிஷ் மகாராணியே இருந்து வந்தார்.

இந்நிலையில், தற்போது தன்னை குடியரசு நாடாக பிரகடனம் செய்துள்ளது பாபடோஸ்.

அந்த நாட்டின் புதிய ஜனாதிபதியாக சான்ட்ரா மாசான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புதிய குடியரசாக அறிவிக்கும் விழா தலைநகர் பிரிட்ஜ்டவுனில் நள்ளிரவு 12 மணிக்கு இடம்பெற்றது.

இதனையடுத்து, கடந்த 30 ஆண்டுகளில் மகாராணி இரண்டாம் எலிசபெத்தை நாட்டின் தலைவர் பதவியிலிருந்து நீக்கும் முதல் நாடாக பாபடோஸ் பதிவாகியுள்ளது.

பாபடோஸுக்கு முன்பு கடந்த 1992 ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணியை தலைவராக ஏற்றிருந்தத மொரீஷியஸ் நாடு குடியரசு நாடாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது, இங்கிலாந்து, ஆவுஸ்திரேலியா, கனடா, ஜமைக்கா போன்ற 15 நாடுகள் மகாராணி இரண்டாம் எலிசபெத்தை தொடர்ந்தும் தங்கள் நாட்டின் ராணியாக ஏற்று, மதிப்பளித்து வருகின்றன.