July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் அதிகளவில் பணம் செலவிடுவதை கட்டுப்படுத்த சட்டம்!

இலங்கையில் தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் அதிகளவில் பணம் செலவிடுவதைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இது தொடர்பில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேர்தலின் போது ஏதேனுமொரு வேட்பாளர், கட்சி அல்லது குழுவொன்று மக்களுடைய வாக்குகளுக்காக எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி அதிகளவில் பணம் செலவிடுவதன் மூலம் பொதுமக்களின் விருப்பு தொடர்பாக குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இல்லாவிடின், கட்சியால் மேற்கொள்ளப்படும் செலவுகளைக் கட்டுப்படுத்தும் தேவைகள் தொடர்பாக இலங்கையில் கலந்துரையாடப்பட்டு வருவதுடன், இந்தியா உள்ளிட்ட அதிகமான நாடுகள் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் சட்ட ஒழுங்குகளை விதித்துள்ளன.

தேர்தலின் போது இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளைக் குறைப்பதற்காகவும், ஏற்பாடுகளைத் தயாரிப்பதற்காகவும் தற்போதுள்ள கட்டளைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்கு, 2017 ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய பாராளுமன்ற தேர்தல் கட்டமைப்பு மற்றும் சட்ட ஒழுங்குகளுக்கமைய மறுசீரமைப்புக்களை அடையாளம் கண்டு, திருத்தங்களைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட செயற்குழுவால் குறித்த தரப்பினர்களுடன் கலந்துரையாடி, உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ள விடயங்களைக் கருத்திற்கொண்டு, முன்மொழியப்பட்ட திருத்தப்பட்ட சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.