திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் இந்தியாவின் ஐ.ஒ.சியுடன் செய்து கொள்ளவுள்ள உடன்படிக்கை என்ன என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மின்சக்தி அமைச்சு ,வலுசக்தி அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் நிதி நெருக்கடிக்கு மத்தியில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் பிரதானமாக தீர்வு காண வேண்டிய பிரச்சினைகளை தெரிவு செய்து தீர்க்க வேண்டிய காலகட்டத்தில், எமக்கு இருக்கும் பிரதான பிரச்சினைகள் என்ன என்பதை தெரிவு செய்ய முடியாது போயுள்ளது.
ஊழல், கப்பம், குடும்ப வியாபார டீல் தான் இவை அனைத்திற்கும் காரணமாகும்.இந்த நாட்டிற்கும், பொருளாதாரத்திற்கும் ஏற்படுத்திக் கொடுத்துள்ள நாசத்தின் பிரதிபலிப்பே பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட அழிவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை எண்ணெய் குதங்களுக்கு என்ன நடந்துள்ளது? மீள பெற்றுக் கொள்வதாக கூறினீர்கள், அவற்றிற்கு என்னவானது? அண்மையில் அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் கடன் பெற தீர்மானிக்கப்பட்டது. கடனுக்கான வட்டி 3 வீதம், ஆனால் தரகுப்பணம் 7 வீதம். அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. நெருக்கடிக்கு மத்தியிலும் ஊழல் செய்யவே அரசாங்கம் முயற்சித்துள்ளது.
அதேபோல் இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி 500 மில்லியன் டொலர் கடன்களை பெற்று எரிபொருள் இறக்குமதி செய்யும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். அதே வேளையில் திருகோணமலை எண்ணெய் குதங்கள் குறித்த உடன்படிக்கை செய்துகொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐ.ஒ.சியுடன் செய்து கொள்ளவுள்ள உடன்படிக்கை என்ன என்பதை சபைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
2003 ஆம் ஆண்டு தற்காலிக உடன்படிக்கை செய்து கொள்ளபட்ட போதிலும் எண்ணெய் குதங்கள் எமக்கு உரித்தானது. இவ்வாறு நாடுகளுக்கு வளங்களை விற்பதானால் நாம் மிகப்பெரிய அழிவை சந்திப்போம் என்று அனுரகுமார கூறியுள்ளார்.