November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மருத்துவ உபகரணங்கள் பகிரப்படும் விதம்; அறிக்கையொன்றை முன்வைக்குமாறு பணிப்புரை

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மனிதவளம் என்பன பகிர்ந்தளிக்கப்படும் முறை தொடர்பில் விரைவில் மதிப்பீட்டை மேற்கொண்டு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

சில வைத்தியசாலைகளில் மருத்துவர்கள் மேலதிகமாக இருக்கும் நிலையில், சில கிராமிய வைத்தியசாலைகளில் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பாராளுமன்றத்தில் நடைபெற்ற சுகாதார அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆதார வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதன் ஊடாக சுகாதார நிலைமைகளை முன்னேற்றமான நிலைக்கு கொண்டு வரக்கூடியதாக இருந்தாலும், மாகாண சபைகளின் கீழ் உள்ள விடயத்தை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவது 13வது அரசியலமைப்பு திருத்தத்துக்கு அமைய அதிகாரப் பரவலாக்கத்துடன் முரண்படுவதால் அதனை ஏற்றுக்கொள்வது சிக்கலுக்குரியது என அவர் இங்கு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை அமைச்சரவைக்கு முன்வைப்பது பொருத்தமானது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் அவ்வப்போது சுகாதாரத் துறையினரால் வேலைநிறுத்தப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சம்பள உயர்வு வழங்கும்போது பொதுவான கொள்கையொன்றை உருவாக்கி அதற்கமைய நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி உபுல் கலப்பதி இக்குழு முன்னிலையில் குறிப்பிட்டார்.

கடந்த சில வருடங்களில் நாட்டுக்குள் மேலதிகமான ஔடதங்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் குழு விசேட கவனம் செலுத்தியதுடன், சில வருடங்களில் தேவைக்கு அதிகமான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

ஔடதங்கள் தொடர்பில் தேசிய தகவல் கட்டமைப்பொன்றை ஆரம்பிக்கவிருப்பதாகவும், நாட்டில் உள்ள சகல வைத்தியசாலைகளையும் இதில் இணைத்துக் கொள்ளவிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும், இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க சுட்டிக்காட்டினார். பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டபோதும் அது இன்னும் முறையாகச் செயற்படாமை குறித்தும் குழு விசேட கவனம் செலுத்தியது.