February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகினார் அர்ஜுன ரணதுங்க

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து விலகியுள்ளார்.

உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கு அர்ஜுன ரணதுங்க எழுதியுள்ள இராஜினாமா கடிதத்தில்,

‘கட்சியில் இருந்து விலகுவதற்கான தனது தீர்மானத்திற்கான காரணங்களைத் தெரிவித்ததோடு, தாம் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தமைக்கான காரணம் அனைத்து மக்களின் பொது நலனுக்காகவும் தேசத்திற்கு சேவையாற்றுவதற்காகவே எனவும், அக்கட்சியின் பல உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியேறிய பின்னரும் தான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு விசுவாசமாக இருந்து சேவையாற்றியதாகவும்’ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2020 தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர், கடந்த காலத்தில் அந்த தோல்விக்கான காரணத்தை அறிந்து கட்சியாக முன்னேற்றம் அடைய ஐக்கிய தேசியக் கட்சிக்கு பல வழிகள் இருந்ததாகவும், ஆனால் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றும் ரணதுங்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனவே தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நீடிப்பது பொருத்தமானதல்ல என நான் கருதுவதால் இன்று முதல் (29) அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க விரும்புவதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தேசத்தின் முன்னேற்றத்திற்காக நீங்கள் ஊக்குவித்த தலைமைப் பண்புகளை நான் மனதாரப் பாராட்டுகிறேன் ” எனவும் அவர் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரிவித்துள்ளார்.