மாகாணசபைகள் இயங்காதுள்ளமை இந்திய- இலங்கை ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை என்பதையே புலப்படுத்துகிறதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில சிறிய குறைபாடுகள் இருந்த போதிலும், பாராளுமன்றத்தின் ஊடாக மாற்றங்களை ஏற்படுத்தி, 2022 இல் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
2022 ஆம் ஆண்டை இரண்டு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய ஆண்டாக எதிர்க்கட்சி கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சவால்மிக்க தருணத்தில் மக்களை காப்பாற்றும் எவ்வித வேலைத் திட்டத்தையும் அரச தரப்பில் காண முடியாதுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு ஐக்கிய மக்கள் சக்திக்கு இருப்பதாகவும் தாம் அடுத்த ஆண்டு முதல் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.