கெரவலபிட்டிய யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனுக்களை டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீதமான பங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பிரதம நீதியரசர் ஜயன்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமை மீறல் மனுக்களை டிசம்பர் மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதியரசர் குழாம் உத்தரவிட்டுள்ளது.
மனுக்கள் மீதான ஆட்சேபனைகள் இருப்பின் டிசம்பர் 6 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறும் சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.