நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் தெரிவித்து அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் டொரிங்டன் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றதோடு, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேயிலை மலையில் காணப்பட்ட நான்கு அடி, மூன்று அடி கொண்ட வளர்ந்த புற்களை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும், பதாதைகளை ஏந்தியும் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
தோட்ட நிர்வாகம் தற்போது வேலை நாட்களை குறைத்துள்ளதாகவும், தேயிலை செடிகளை பராமரிப்பதிலிருந்து கைநழுவி விட்டதால் தேயிலை மலைகள் காடாகி காணப்படுவதுடன், தொழிற் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட இத் தொழிலாளர்கள் தற்போது பொருட்களின் விலை அதிகரிப்பால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் நிர்வாகம் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதாக இருந்தால் கட்டாயமாக 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதால் நிர்வாகத்தால் நிர்ணயக்கப்படும் கொழுந்தினை பறிக்க முடியாத சூழ்நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.