July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தனிக் கட்சியாக ஆட்சியமைப்பதே எமது குறிக்கோள்”: ஜேவிபி

தனியொரு கட்சியாக தவிர, கூட்டணியாக அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்தை தமது கட்சி ஒருபோதும் கொண்டிருக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘கிராமத்தில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக சிலாபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் மக்கள் மத்தியில் இந்த அரசாங்கத்திற்கு உள்ள வரவேற்பு 30 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோல ஐக்கிய மக்கள் சக்திக்கான மக்கள் வரவேற்பும் குறைவடைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மக்கள் விடுதலை முன்னணிக்கு மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு 14 அல்லது 15 சதவீதமாக அதிகரித்துக் காணப்பட்டது. தற்போது அது இன்னும் அதிகரித்து இருக்கலாம் என்றும் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்த இரண்டு கட்சிகளுக்கு ஆட்சியைக் கொடுத்தது போதும். இதனால் மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒருதடவை வாய்ப்பொன்றை கொடுத்துப் பார்ப்போம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நாங்கள் ஒருபோதும் கூட்டணி அரசாங்கமொன்றை அமைக்க மாட்டோம். இதுவரை காலமும் இந்த நாட்டை ஆட்சி செய்த இரண்டு கட்சிகளும் தான் தற்போது நாடு முகங்கொடுத்துள்ள அனைத்து பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து இன மக்களுடனும் இணைந்து மிகப் பெரிய மக்கள் கூட்டணியொன்றை அமைத்து ஆட்சியை அமைப்பதே எமது குறிக்கோளாகும் என்றும் கூறியுள்ளார்.