அதிவேக வீதியின் புதிய களனிப் பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கண்டித்துள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதமரோ அல்லது முன்னாள் அமைச்சரவையின் உறுப்பினரோ பொறுப்புக் கூற வேண்டும் என்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அல்லது பாராளுமன்ற தெரிவிக்குழு ஆகியவற்றின் அறிக்கைகளில் குறிப்பிடப்படவில்லை என்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
‘ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அச்சுறுத்தலை ஐக்கிய தேசியக் கட்சி கண்டிக்கின்றது’ என்ற தலைப்பில் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர் அல்லாத மற்றும் அது தொடர்பில் நீதிமன்றத்தினால் தீர்பு அறிவிக்கப்படாத நபர்களின் பிரஜா உரிமையை இல்லாது செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளமையானது ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கும், நீதித்துறை மற்றும் சட்டவாக்கல் செயற்பாடுகளுக்கும் எதிரானது என்று அந்தக் கட்சி கூறியுள்ளது.
இதன்மூலம் இலங்கை அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆம் சரத்துகளை மீறப்படுகின்றது என்பதுடன், அரசியலமைப்பை பாதுகாப்பதாக ஜனாதிபதி செய்துள்ள சத்தியப் பிரமானத்தையும் மீறுவதாக அமையும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.