
‘ஒமிக்ரோன்’ எனப்படும் புதிய வகை கொவிட் வைரஸ் பரவும் தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடந்த 14 நாட்களில் எந்தவொரு சுற்றுலாப் பயணியும் இலங்கைக்கு வரவில்லையென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளி விபரத் தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 14 நாட்களில் மேற்குறிப்பிட்ட ஆபிரிக்க நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளைத் தவிர வேறு எவரும் நாட்டிற்கு வந்துள்ளார்களா என்பது குறித்து உரிய திணைக்களங்கள் ஆராய்ந்து அதற்கேற்ப சுகாதார தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நாடுகளைத் தவிர வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவித தடையும் இல்லை என கூறியுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விசா வழங்கும் போது, அவர்கள் சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார்களா என்பது குறித்து ஆராயப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டவர்கள் மாத்திரம் இலங்கையில் நடைபெறவுள்ள எல்.பி.எல் கிரிக்கெட் தொடரை பார்வையிட நாட்டிற்கு வர முடியும் எனவும், சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடி இதுதொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் கொரோனா வைரஸ் வைரஸ் தாக்கம் இருந்து கொண்டிருக்கும் நிலையில் கூட சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளை ஏற்பாடு செய்து வருகின்றன.
இதனிடையே, இலங்கை சனத்தொகையில் ஏறக்குறைய 90 சதவீதமானோருக்கு தற்போது தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், சுகாதார பரிந்துரைகளுக்கு அமைவாக புதிய இயல்புநிலை திட்டத்தின் கீழ் மக்களைப் பாதுகாத்து நாட்டைப் பேணுவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, கடந்த 14 நாட்களுக்குள் தென்னாபிரிக்கா, நமீபியா, பொட்ஸ்வானா, ஜிம்பாப்வே, லெசதோ மற்றும் சுவாசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று நள்ளிரவு முதல் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் பரிந்துரையின் பேரில் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையானது சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.