January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘உரப் பிரச்சினை என்னவானாலும் சீன- இலங்கை நட்புறவே முக்கியம்’: ஷஷீந்திர ராஜபக்‌ஷ

உரப் பிரச்சினை என்னவானாலும் சீனாவுடனான இலங்கையின் நட்புறவே முக்கியம் என்று விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவசாய அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு உள்ளிட்ட மூன்று இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இதனை கூறியுள்ளார்.

சந்தோசத்திலும் துக்கத்திலும் கைகோர்த்த நட்பு நாடான சீனாவை அந்நியப்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சீன உர இறக்குமதியில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, மக்களை குழப்பியதால் சீனா அதிருப்தியில் அந்நியப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சீன- இலங்கை நட்புறவு சகலதையும் விட உயர்வானது. உர விவகாரத்தில் என்ன தீர்மானம் எடுத்தாளும், அதனை தாண்டி இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும்.

இந்த நாட்டு மக்களை நோயாளர்களாக மாற்றும், பூமியை நாசமாக்கும், நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை அழிக்கும் வகையிலும், 100- 150 பில்லியன் ரூபாய்களை ஒரு சிலர் பங்குபோடும் விதமாக முன்னெடுக்கும் விவசாய முறைமை முழுமையாக கைவிட வேண்டும்.

மக்களை ஆரோக்கியமாக வாழ வைக்கும் வேலைத்திட்டதையே அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

எனினும், இந்த ஒட்டுமொத்த வேலைத்திட்டத்தையும் அழிக்கும் கூட்டமொன்று மக்களை குழப்பியடித்துக்கொண்டுள்ளது.

இதில் எதிர்க்கட்சிகள், இடதுசாரி கட்சிகள், அவர்களுக்கு துணைபோகும் ஊடகங்கள் தொடர்ச்சியாக செயற்பட்டுக்கொண்டுள்ளனர்”.

என்று இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் நனோ நைற்றிஜன் உரத்தில் ஊழல் எனக் கூறி, அதனையும் குழப்பியடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.