உலகளாவிய பொருளாதாரச் சவால்களை வெற்றி கொண்டு நாட்டை முன்னேற்றுவதற்காக, எதிர்காலங்களில் பல்வேறு தீர்மானங்களை எடுக்க வேண்டி இருக்குமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.
அரசின் தீர்மானங்கள் விமர்சனங்களுக்கு உள்ளானாலும், எதிர்வரும் காலங்களில் அதன் பிரதிபலன்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைக்குமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
“ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழா”இல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
குறுகியகால சிக்கல்களை வெற்றி கொண்டதன் பின்னர் பொருளாதார நிவாரணங்களை வழங்க முடியும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.
குறுகியகால இலாபம் ஈட்டுவதற்கு பதிலாக உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடிய தரமான உற்பத்திகளை உருவாக்குவதற்கு கைத்தொழிலாளர்கள் செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்காக இலங்கையில் தனித்துவமான திறன்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஏற்றுமதித் துறையில் நிலவுகின்ற சிக்கல்களை உடனடியாக தீர்ப்பதாக உறுதியளித்த ஜனாதிபதி, ஏற்றுமதித் துறையின் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக அரசாங்கம் மற்றும் தனியார் துறையினர் கைகோர்த்து இணைந்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
1981 ஆம் ஆண்டு ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் “ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழா” ஆரம்பிக்கப்பட்டது. இம்முறை 24 ஆவது விருது விழா நடத்தப்பட்டது.
இலங்கையில் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய உயர் மற்றும் தனித்துவமான விருது இதுவாகும். ஏற்றுமதித் துறையின் வளர்ச்சிக்காக உயரிய பங்களிப்பை வழங்கிய ஏற்றுமதியாளர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகின்றது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஜனாதிபதியினால் 24 விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.