November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்காவுக்கு அழைப்பு!

(Photo : @StateDRL)

இலங்கையில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் அமெரிக்கா அதிக ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலக தமிழர் பேரவை ஆகியன கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலக தமிழர் பேரவை இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பொன்றின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சட்ட நிபுணர்கள் குழுவினர் கடந்த 13 ஆம் திகதி அமெரிக்கா பயணமாகியுள்ளனர்.

இந்த குழுவினர் உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகளுடன் இணைந்து நவம்பர் 15 – 22 ஆம் திகதிக்கிடையில் அமெரிக்காவில் பல குறிப்பிடத்தக்க செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அமெரிக்க அரசாங்கத்தின் முக்கிய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அமெரிக்க காங்கிரஸின் உறுப்பினர்களிடம் தமிழ் மக்களின் கவலைகளை முன்வைத்துள்ளனர்.

இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா வழங்கிய ஒத்துழைப்பிற்கு தூதுக்குழு பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

நல்லிணக்கத்திற்கான ஒரு முழுமையான அணுகுமுறையை ஊக்குவிப்பதன் ஊடாக செயல்திறன் மிக்க பங்களிப்பை வழங்குமாறு தூதுக்குழு அமெரிக்காவிடம் அழைப்பு விடுத்துள்ளது.

சமத்துவம், நீதி, சமாதானம், கண்ணியம் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளை நிவர்த்தி செய்வது, மீண்டும் தமிழர்களுக்கு எதிரான நிகழ்வுகள் நிகழாமல் இருக்க உத்தரவாதம் அளிப்பது உள்ளிட்டவை தொடர்பில் பிரதிநிதிகள் குழு வலியுறுத்தியது.

 

இலங்கையின் தற்போதைய நிலைவரம், எதேச்சதிகாரம் மற்றும் இராணுவமயமாக்கப்பட்ட ஆட்சியின் போக்கு, சிறுபான்மை சமூகங்கள் தொடர்ந்தும் ஓரங்கட்டப்படுவது, மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார சிக்கல்கள் என்பன குறித்தும் அமெரிக்காவின் பிரதிநிதிகளிடம் எடுத்து கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமைகளை மாற்றியமைப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதில் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ஆற்றக்கூடிய மாற்றமான பாத்திரம் குறித்தும் தூதுக்குழு அடிக்கோடிட்டுக் காட்டியது.

நாட்டின் ஆட்சி மற்றும் பொருளாதார சீர்கேடுகளை மேலும் சீர்குலைப்பதை தடுப்பது மற்றும் அனைத்து சமூகங்களுக்கிடையில் சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பது தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டதோடு, அதற்காக செயற்படுமாறும் அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.