January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கறுப்பு ஒக்டோபர்: வடபுலத்து முஸ்லிம்களின் அகதி வாழ்க்கைக்கு வயது 30

மன்னார் மாவட்டத்தில் ஐநாவின் உதவியுடன் நடந்த மீள்குடியேற்றம் (2009)

pic: UNHCR/B.Baloch 

இலங்கையின் வடக்கு மாகாண முஸ்லிம்கள் தமது வாழ்விடங்களில் இருந்து 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.

யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 75,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வெறும் 500 ரூபா பணம் மற்றும் சில உடுதுணிகளுடன் குறுகிய காலக்கெடுவுடன் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்ட நிகழ்வை வடபுலத்து முஸ்லிம்கள் “கறுப்பு ஒக்டோபர்’ என நினைவுகூர்கின்றனர்.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட இந்த சம்பவம் ஒரே மொழி அடையாளத்தைக் கொண்ட சமூகங்களுக்கு இடையிலான உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முஸ்லிம்கள் அரச படையினருக்கு மறைமுகமாக ஆதரவளித்து வந்ததாகக் கூறி அவர்களை சொந்த குடிமனைகளை விட்டு வெளியேற்றிய விடுதலைப் புலிகளின் செயற்பாடு உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பெரும்  விமர்சனத்துக்குள்ளானது.

பூர்வீக இடங்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் உடைமைகளை இழந்து வெளியேற்றப்பட்ட மக்களை பராமரிப்பதிலும் மீளக்குடியமர்த்துவதிலும் அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கமும், பின்னர் வந்த ஆட்சியாளர்களும் பெருமளவில் அக்கறை காட்டவில்லை என்ற விமர்சனமும் உள்ளது.

முஸ்லிம்களின் வெளியேற்றம் குறித்து நீண்டகாலம் மௌனம் காத்த தமிழீழ விடுதலைப் புலிகள் 2002-ம் ஆண்டில் சமாதானப் பேச்சுக்கள் தொடங்கிய காலத்தில் பகிரங்கமாகவே வருத்தம் தெரிவித்திருந்தனர். கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம்  மன்னிப்பு கோருவதாகக் கூறினார், முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு ஒத்துழைப்பதாக தலைவர் பிரபாகரனும் உத்தரவாதம் அளித்தார்.

சமாதானப் பேச்சுவார்த்தை நடந்த காலப்பகுதிகளில்  தமிழ் மக்கள் பெருமளவில் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியிருந்தாலும், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சுமுகமாக அமையவில்லை.  பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தரப்பினர் வடபுலத்து முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் உரிய கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனங்கள் பரவலாக உள்ளன.

2005-ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களின் வெளியேற்றம் மற்றும் மீள்குடியேற்றம் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதாகக் கூறியிருந்தாலும், அது நிறைவேறவில்லை.

வடபுலத்து முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் தலைவர்கள் ஆளும் தரப்பில் செல்வாக்கு மிக்க அமைச்சர்களாக பல தடவைகள் நீடித்த போதிலும் தமது மீள்குடியேற்றப் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகாண முடியவில்லை என்று இடம்பெயர்ந்த முஸ்லிம்கள்  கூறுகின்றனர்.

‘காடழிப்பு’- தென்னிலங்கையில் பிரசாரம்

புத்தளம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் வாழ்ந்து வந்த வடபுலத்து முஸ்லிம்கள், போர் முடிவுக்கு வந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமது பூர்வீக இடங்களுக்குத் திரும்ப ஆரம்பித்தபோது புதிய பல சவால்களும் காத்திருந்தன.

20 வருடங்களில் தமது கிராமங்கள் அடர்ந்த காடுகளாக மாறியிருந்தன. வீடுகள், பாடசாலைகள் மற்றும் வணக்கஸ்தலங்கள் என அனைத்தும் காடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.

வடக்கு அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றத்துக்கான ஜனாதிபதி செயலணியின் கீழ், மீள்குடியேற்ற முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டன. காடுகள் வெட்டப்பட்டு, பாதைகள் அமைக்கப்பட்டு, வீட்டு நிர்மாணப் பணிகளும் ஆரம்பமாகின.

ஆனால், முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காக வடக்கில் வில்பத்து சரணாலயத்திற்கு உட்பட்ட காடுகள் அழிக்கப்படுவதாக பிரசாரங்கள் தென்னிலங்கையில் தீவிரமடைந்தன.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எதுவும் அழிக்கப்படவில்லை என்றும், மக்கள் தமது சொந்த இடங்களிலேயே மீளக்குடியேறுகின்றனர் எனவும் இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் சார்பில் வாதிடப்பட்டது. எனினும் தீவிர இனவாத பிரசாரங்களுக்கு நடுவே அவர்களின் வாதம் எடுபடவில்லை, மீள்குடியேற்றமும் தடைப்பட்டது.

வாழ்வாதாரம் குறித்த சவால்கள் 

இடம்பெயர்ந்த மக்களின் குடியிருப்பு – புத்தளம்    (pic: Norwegian Refugee Council-2007)

 

வட மாகாண முஸ்லிம்களிடம் பூர்வீக இடங்களுக்குத் திரும்ப வேண்டுமென்ற உணர்வு இருந்தாலும், அவர்கள் நம்பியுள்ள வாழ்வாதார வழிகள் அங்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பெரும்பாலும் புத்தளம், கற்பிட்டி உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

தமது பரம்பரை வாழ்வாதாரங்களை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள் அரசு வழங்கிய சொற்ப உதவித் தொகையையும் கூலித் தொழில்களையும் நம்பி இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்க்கையை கடத்திவிட்டனர். அவர்களின் அடுத்த தலைமுறையினரும் வேறு இடத்தில் புதிய வாழ்க்கை முறைகளுக்கு பழக்கப்பட்டுவிட்டார்கள்.

மக்களின் மீள்குடியேற்றத்தின்போது, வாழ்வாதாரம், பிள்ளைகளின் கல்வி, தொழில் வாய்ப்புகள்,  மற்றும் அடிப்படை வசதிகள் போன்ற இடம்பெயர் வாழ்வு ஏற்படுத்தக்கூடிய பொதுவான சவால்களுக்கு தீர்வுகாணும் விதத்தில் திட்டங்களை வகுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

வாக்குரிமை

வடக்கு முஸ்லிம்களின் வாக்குரிமையுடன் தொடர்புடைய பல்வேறு சிக்கல்களும் காலத்துக்குக் காலம் மேலெழுவதை அவதானிக்க முடிகின்றது.

புத்தளத்தை அண்மித்து வாழும் வடக்கு முஸ்லிம்களில் சிலர் தமது சட்டபூர்வ பதிவுகளை புத்தளம்  மாவட்டத்திலேயே பேணிவருகின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் தமது வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து பதிவுகளையும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே இன்னும் வைத்துள்ளனர்.

அவர்கள் தமது வாக்குரிமையை உறுதி செய்வதற்காக புத்தளத்தில் இருந்து வடக்கு பிரதேசங்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டியுள்ளதால் அவர்களை வாக்களிப்புக்காக பஸ்களில் அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையால் ஏற்படக்கூடிய அரசியல் குளறுபடிகளுக்கிடையிலும் இந்த மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

இன்றையே தேவை

வடக்கு முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகள் காலத்துக்குக் காலம் தேசிய அரசியலில் ஏற்படும் ஆட்சி மாற்ற அலைகளில் சிக்கிக் கொள்வதால், இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வும் இழுபறியாகவே உள்ளதாக அந்த மக்களின் நலன்களுக்காக குரல்கொடுக்கும் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

30 வருட அகதி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து, மக்களை அவர்களின் சொந்த இடங்களில் கௌரவமாக குடியமர்த்துவதற்கு கொள்கை ரீதியான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.

வடக்கு கிழக்கில் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் அரசியல் தலைவர்கள், தமது சகோதர சமூகத்தின் மூன்று தசாப்த கால சமூக பிரச்சனைக்கு விடிவு காணவும் தீவிரமாக குரல் கொடுக்க வேண்டிய தார்மீகக் கடமை உள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை.