“ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முழுப் பொறுப்பு என்பதால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
“எனக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் எந்த முரண்பாடும் இல்லை. ஆனால் கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வழிநடத்தியவர்களுடன் எமக்கு பிரச்சினை உள்ளது” என்றார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை அழித்துவிட்டு இன்று இந்த அரசாங்கத்தையும் அழிக்க முயற்சிக்கின்றார். ஈஸ்டர் தாக்குதலுக்கு அவரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் வலுவாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு ஒத்துழைக்க முடியாதவர்கள் அனைத்து சலுகைகளையும் எடுத்துக்கொண்டு கூச்சலிடாமல் வெளியேற வேண்டும் அல்லது அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.
ஆட்சியை நடத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஒரு பாராளுமன்ற உறுப்பினருடன் அரசாங்கத்தை நடத்தினார். கட்சியை விட்டு அனைவரும் வெளியேறினாலும் ஆட்சி நடக்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.