July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒரு இலட்சத்து இருபதாயிரம் சாட்சியங்கள் எவ்வாறு திரட்டப்பட்டன?; வெளிவிவகார அமைச்சர் கேள்வி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையையும், ஆணையாளரையும் நாம் அங்கீகரிக்கின்றோம்.ஆனால் இலங்கைக்கு எதிராக சாட்சியங்களை திரட்டி சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் இலங்கையை கொண்டு நிறுத்தும் விசேட பொறிமுறையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.எவரும் எம்மை அச்சுறுத்துவதால் அடிபணியப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சபையில் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் சாட்சியங்கள் எவ்வறு திரட்டப்பட்டது,யார் மூலமாக பெற்றுக் கொள்ளப்பட்டதென்ற உண்மைகளை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாடுகளிடம் நாம் மண்டியிட தயாராக இல்லை. இலங்கையின் சுக கௌரவத்தை பாதுகாப்பதே எமது கொள்கையாகும்.நாம் தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தகவல்களை வழங்கிக் கொண்டுள்ளோம்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் அதிகாரிகள் இருவர் ஜனவரி மாதத்தில் நாட்டிற்கு வருகின்றனர்.

அவர்களிடம் நாம் எதனையும் மறைக்க மாட்டோம்.அவர்கள் இலங்கைக்கு வர முடியும், நாட்டின் சகல பகுதிகளுக்கும் பயணிக்க முடியும், எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தவும் முடியும்.ஆரம்பத்தில் இருந்தே ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக நாம் பங்களிப்பு செலுத்தி வருகின்றோம். ஐக்கிய நாடுகள் சபையை கட்டியெழுப்புவதிலும் இலங்கையர்கள் பாரிய சேவையாற்றியுள்ளனர்.மனித உரிமைகள் ஆணைக்குழுவையும், ஆணையாளரையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

ஆனால் இலங்கைக்கு எதிராக சாட்சியங்களை திரட்டி சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் இலங்கையை கொண்டு நிறுத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு ஏதுவான இலங்கைக்கு என்ற விசேட பொறிமுறையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.இது ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டம் மற்றும் சம்பிரதாயங்களுக்கு முற்றிலும் விரோதமான செயற்பாடாகும்.அவர்களுடன் இணைந்து பயணிப்பதால் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள போவதில்லை.

செப்டெம்பர் மாதத்தில் கூடிய மனித உரிமைகள் பேரவையின் போதும் இலங்கைக்கு எதிராக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் சாட்சியங்கள் இருப்பதாக ஆணையாளர் தெரிவித்தார்.அந்த சாட்சியங்கள் என்ன? எவ்வாறு இந்த சாட்சியங்கள் திரட்டப்பட்டன? சட்ட முறைப்படி இதனை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

இந்த சாட்சியங்களை யார் பெற்றுக்கொடுத்தது,அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.வெளிப்படை தன்மை இல்லாது, மறைந்திருந்து முன்வைக்கும் சாட்சியங்களை ஏற்றுக்கொண்டு சுயாதீன நாட்டிற்கு எதிராக சாட்சியங்களை பயன்படுத்த எந்த பொறிமுறையும் இல்லை என்றார்.