January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியாவை தமது நிரந்தர எதிரியாகவே கருதும் கொள்கையில் இலங்கை அரசு பயணிக்கின்றது’

இலங்கையின் பெளத்த – சிங்கள பேரினவாத ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ள தமிழர்களை பிரதான எதிரிகளாக மாற்றியதுடன், தமிழர்களுடன் நெருக்கமான இந்தியாவையும் தமது நிரந்தர எதிரியாக கருதும் கொள்கையிலேயே இலங்கை தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்தார்.

இந்த வலயத்தில் இந்தியாவின் பங்களிப்பு அவசியம். இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரே நாடாக தாம் இருக்க வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகின்றது என்பதையும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் வெளிவிவகார கொள்கையில் முதலில் தேசிய வேலைத்திட்டம் உள்வாங்கப்படுவது அவசியமானது. இலங்கை அந்த விடயத்தில் தம்மை உண்மையென நிரூபித்து வருகின்றது.அது எப்படியென்றால் இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் பெளத்த-சிங்கள கொள்கையில் பயணித்து, சிங்கள- பெளத்த அடையாளத்தை வெளிப்படுத்தவே பயணித்துக் கொண்டுள்ளனர்.

இலங்கை சிங்கள- பெளத்த கொள்கைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்குமென வெளிப்படுத்தி வருகின்றனர்.சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கை மிக வேகமாக சிங்கள- பெளத்த அடியெடுத்து வைத்தது. அதன் விளைவாக உள்நாட்டிலேயே எதிரிகளை உருவாக்கிக்கொண்டது.தமிழர்கள் பிரதான இலக்காகியதுடன், இன்று முஸ்லிம், கிறிஸ்தவர்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்

இந்தியாவையும் எதிரிகள் என நினைக்கும் நிலை ஆரம்பத்திலேயே உருவாகிவிட்டது.ஆகவே இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் விதமான கொள்கைகளையே இலங்கை எப்போதும் வகுத்து வந்துள்ளது.ஒவ்வொரு அரசாங்கமும் இதே கொள்கையில் தான் பயணித்துக் கொண்டுள்ளது.இதுதான் உண்மையாகும்.

இலங்கை மீண்டும் சிங்கள-பெளத்த கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு தமது அதிகாரத்தை கையில் வைத்துக்கொள்ள சீனாவுடன் நெருக்கத்தை கையாண்டு வருகின்றது.இது சீனாவின் நலனுக்காக அவர்கள் நாட்டுக்குள் ஊடுருவவும் இடமளித்துள்ளனர்.சீனாவும் இதனை உறுதிப்படுத்திக்கொண்டு இலங்கையில் அவர்களின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.இது பூகோள அரசியலில் பாரிய நெருக்கடியை இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ளது.

வல்லரசுகளான இந்தியா, சீனா, அமெரிக்காவை நாட்டுக்குள் இடமளித்து நெருக்கடிக்குள் விழுந்துள்ளது.ஆனால் இந்த பூகோள அரசியலை இலங்கை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த வலயத்தில் இந்தியாவின் பங்களிப்பு அவசியம். அவர்களும் இங்கு வேறு வல்லரசுகளின் ஆதிக்கத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரே நாடாக தாம் இருக்க வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகின்றது. இந்தியாவை சமாளிக்கலாம் என நீங்கள் நினைத்தால் அதற்கு ஏனைய வல்லரசுகளுக்கு சில பகுதிகளையும் இந்தியாவிற்கு சில பகுதிகளையும் வழங்கலாம் என நீங்கள் கருதினால் அது ஒருபோதும் வெற்றிபெறாது.

இதற்கு எமக்கு இருக்கும் ஒரே வழிமுறை, இலங்கையின் பன்மைவாத நாடாகவும்,தேசிய கொள்கையை மாற்றிக்கொள்வதும், புதிய அரசியல் அமைப்பின் மூலமாக அதனை உறுதிப்படுத்துவதும் மட்டுமேயாகும்.பிரிவுகளுக்கு இடமளிக்காது பூகோள அரசியலை கையாளுவதுமே சகலருக்கும் சாதகமாக அமையும்.எனவே வெளிவிவகார அமைச்சர் உங்களின் தனிப்பட்ட ஆதிக்கத்தை கொண்டேனும் இதனை மாற்றியமைக்க வேண்டும் என்றார்