ஆளுந்தரப்பு பராராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்ஹ, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
2021, நவம்பர் 25 ஆம் திகதி முதல் அதாவது நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பாராளுமன்ற ஆசனத்தை இராஜினாமா செய்திருப்பதாக இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1981ஆம் ஆண்டு ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 64 (1)ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இது பற்றி அறிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக கடமையாற்றுமாறு ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கையை ஏற்று எதிர்வரும் 29 ஆம் திகதி அமெரிக்காவிற்கு புறப்படுவதாக கூறியிருந்த மஹிந்த சமரசிங்க, அதற்கமைய தான் பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்வதாக கூறியிருந்தார்.
பொருளாதார ரீதியில் மட்டுமல்ல அரசியல் ரீதியிலும் உறவை பலப்படுத்த வேண்டும்.அதற்கான பணிகளை ஆரம்பிக்கவே நான் அங்கு பயணிக்கின்றேன் எனவும் அவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் சபையில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.