January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகில் எரிவாயு விபத்துக்கள் இல்லாத நாட்டை காண முடியாது – லசந்த அழகியவண்ண

உலகில் சமையல் எரிவாயு விபத்துக்கள் இல்லாத எந்த நாட்டையும் காண முடியாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் அதன் தனியார் நிறுவனமான இன்டடெக் நிறுவனமும் எரிவாயு சிலிண்டர்களின் சமையல் எரிவாயு கலவையை ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

இலங்கையில் இந்த மாதம் ஏற்பட்ட தொடர் சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் தொடர்புடைய விபத்துக்கள் நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

லிட்ரோ கேஸ் நிறுவனத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் 350 மில்லியன் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் காரணமாக நாட்டில் ஐந்து அல்லது ஆறு விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டு முதல் லாஃப்ஸ் நிறுவனத்தினால் விற்பனை செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் காரணமாக வீடுகளில் 12 விபத்துக்களும் வணிக வளாகங்களில் 9 விபத்துக்களும் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்களில் 2 விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, சமையல் எரிவாயு சிலிண்டரின் தரம், குழாயின் தரம் மற்றும் ஏனையவற்றின் தரம் குறித்து நுகர்வோர் அதிகார சபையினால் 2012 முதல் 2009 ஆம் ஆண்டுகளில் 5 வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வாழ்க்கைத் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்கான வர்த்தமானிகளை வெளியிடுவது மற்றும் சட்டங்களை இயற்றுவது குறித்து ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.

சமையல் எரிவாயு அபாயத்தை பூஜ்ஜியமாக குறைக்கும் நோக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, எரிவாயு கலவையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது என அரச பகுப்பாய்வாளர் தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.