January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாவதாக ஆய்வில் தகவல்

இலங்கையில் ஐந்து பெண்களில் ஒருவர் தனது நெருங்கிய துணையிடமிருந்து உடல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது நாட்டின் மொத்த பெண்கள் சனத் தொகையின் 20.4% என கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.

ஒரு துணையிடமிருந்து பாலியல் வன்கொடுமையை அனுபவித்த 49.3% பெண்களில் பாதி பேர் இதற்கு எதிராக யாருடைய  உதவியையும் நாடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு நெருங்கிய துணையிடமிருந்து உடல் அல்லது பாலியல் ரீதியான வன்முறையை அனுபவித்த 35.7% பெண்களுக்கு தற்கொலை எண்ணங்கள் இருப்பதாகவும் கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

இந்த தரவுகள் இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொண்டுள்ள வன்முறையின் தாக்கத்தை தெளிவாகக் காட்டுகின்றன.

இந்தச் சூழ்நிலையை மாற்றி அமைக்க வன்முறையை எதிர்கொள்ளும் பெண்கள் தேசிய உதவிச் சேவைகளின் உதவியைப் பெற ஊக்குவிக்கப்படுவதும், அத்தகைய உதவிகளை வழங்குவதற்கு தேவையான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதும் இன்றியமையாததாகும்.

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம், கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து, நெருங்கிய துணையினால் மேற்கொள்ளப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்காக 16 நாட்கள் விசேட பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.

இதன் ஒரு அங்கமாக அண்மையில் கொழும்பு மாநகர சபையின் கட்டடம் செம்மஞ்சள் நிறத்தில் ஒளிர செய்யப்பட்டதோடு “மிதுரு பியச” தொலைபேசி சேவை இலக்கத்தை காட்சிப்படுத்தியது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து நாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவ்வாறான சமயங்களில் உதவி சேவைகளை அழைப்பதற்கு பெண்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.