இலங்கை, பன்னிப்பிட்டி-ஹொக்கந்தர பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை 4 மணியளவில் வீட்டில் உள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என கொட்டாவ பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த வெடிப்புச் சம்பவத்தினால் குறித்த வீடு பலத்த சேதங்களுக்கு உள்ளாகிய போதிலும், வீட்டில் வசிப்பவர்கள் எந்தவிதமான பாதிப்பும் இன்றி தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி, இந்த மாதத்தில் நாட்டில் பதிவான நான்காவது எரிவாயு சிலிண்டர் தொடர்பான சம்பவம் இதுவாகும்.
வெலிகம கப்பரதொட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நவம்பர் 4 ஆம் திகதி எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூவர் காயமடைந்ததாக பொலிஸார் தகவல் வெளியிட்டிருந்தனர்.
நவம்பர் 16 ஆம் திகதி, இரத்தினபுரியில் உள்ள உணவகம் ஒன்றில் இது போன்ற வெடிப்புச் சம்பவம் பதிவானது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையே இந்த சம்பவத்திற்கு காரணம் எனத் தெரிய வந்தது.
இதேபோல் கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள உணவகத்தில் நவம்பர் 20 ஆம் திகதி, எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூன்று பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.