July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மூன்றில் இரண்டு பலம் இல்லாமல் போகும்’: அரசாங்கத்தை எச்சரிக்கிறார் மைத்திரி

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 எம்பிக்களின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது என்பதனை நினைவில் வைத்துக்கொண்டு செயற்படுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட செலவீனங்கள் தொடர்பில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே வெளியிட்ட கருத்து தொடர்பில், இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு எச்சரித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியின் செலவீனங்கள் தொடர்பான விவாதத்தின் போது, 2018 ஆம் ஆண்டில் இருந்த ஜனாதிபதியை விடவும் தற்போதைய ஜனாதிபதி குறைந்தளவான நிதியையே ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதியை விமர்சிக்கும் வகையில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கூறியிருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பில் இன்று மைத்திரிபால சிறிசேன பதிலளித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக கூறினால் அதற்கு பதிலளிக்க எனக்கு உரிமையுள்ளது. அடித்தால் நாங்கள் திரும்பியடிப்பதில்லை. பாவம்தான் பார்ப்போம். நாம் அவ்வாறு அடித்துக்கொள்ளும் மனிதர்கள் அல்ல. ஆனால் நாங்கள் அடித்தால் வேறு விதமாகவே அடிப்போம் என்பதனையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று இதன்போது மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் வீசுவதற்கு நான் விரும்பவில்லை. நான் எனக்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகள் செலவு செய்தமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முன்மாதிரியாக இருந்தேன். விமானங்கள், ஹெலிகப்டர்கள் பயன்படுத்தியமை தொடர்பில் நான் 2015 ஆம் ஆண்டு முதல் முன்மாதிரியாக இருந்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், அடித்துக்கொள்ள வேண்டுமென்றால் வருமாறு கூறுகின்றனர். அவ்வாறு அடித்துக்கொள்ளப் போனால், எப்படி எப்படி காயங்கள் ஏற்படும் என்று தெரியவில்லை. மூன்றில் இரண்டு பலம் மற்றும் அரசாங்கத்தை நடத்திச் செல்வது தொடர்பாக ஆழமாகவும், புத்தியுடனும் சிந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள மைத்திரிபால சிறிசேன, மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 எம்பிக்களின் கைகளிலேயே இருக்கின்றது என்பதனை புரிந்துகொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.