January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முன்னாள் ஜனாதிபதி, அரசாங்கத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவையை ஈஸ்டர் தாக்குதல்களின் குற்றவாளிகளாக ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படி பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

களனி கல்யாணி பொன் நுழைவாயிலை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென்றும் அந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக கடந்த அரசாங்கம் நியமித்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவே அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாணைக்குழுவின் பரிந்துரைகள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, தொடர் நடவடிக்கைகளுக்காக நீதியரசர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றிடமும் கையளிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ள குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டத்தை நிறைவேற்ற முடியுமென்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கு அவசியான மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் அரசாங்கத்துக்கு உள்ளதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கோரிக்கைகளை முன்வைக்கும் போது கவனமாக இருக்குமாறும் மக்களை ஏமாற்ற வேண்டாமென்றும் ஜனாதிபதி எதிர்க்கட்சியினருக்கு தெரிவித்துள்ளார்.