November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழர்களின் பூர்வீக நிலத்தையோ விவசாய பூமியையோ வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நோக்கம் எமக்கில்லை’

தமிழ் மக்களின் பூர்வீக நிலத்தையோ, அவர்களின் விவசாய பூமியையோ வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நோக்கம் எமக்கில்லை, தமிழர் பூமியில் சிங்கள மக்களை புதிதாக குடியேற்றவோ அல்லது விகாரைகளை உருவாக்கவோ நாம் முயற்சிப்பதாக தமிழர் தரப்பு சந்தேகங்கொள்ள வேண்டாம் என தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள், கிராமிய சிற்ப கலைகள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சபையில் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை சிங்கள பெளத்த மயமாக்குகின்றோம் என்ற குற்றச்சாட்டை தமிழ் அரசியல் தரப்பினர் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். பாதுகாக்க வேண்டிய பகுதிகளை பாதுகாக்க நாம் தயாராக உள்ளோம்.தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற நோக்கத்தில் இவற்றை பாதுகாக்கவில்லை.அல்லது இந்து பெளத்த, கிறிஸ்தவ, முஸ்லிம் அடிப்படையிலும் அல்ல, இது இலங்கைக்கென்ற அடையாளம் என்ற அடிப்படையில் பாதுகாக்கப்படுகின்றது.இந்த நிகழ்காலத்தை நாம் எதிர்காலத்திற்கு கொண்டு சேர்க்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.

ஆக்கிரமிப்பு ரீதியில் இது முன்னெடுக்கப்படுகின்றது என்றோ, அல்லது மக்களை புதிதாக குடியேற்றவோ அல்லது விகாரைகளை உருவாக்கவோ நாம் முயற்சிப்பதாக தமிழர் தரப்பு நினைக்கலாம். ஆனால் அது இடம்பெறவில்லை. தமிழ் மக்களின் பூர்வீக நிலமோ, அவர்களின் விவசாய நிலங்களோ வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நோக்கம் எமக்கில்லை. இதனை மீண்டும் மீண்டும் நாம் தெரிவித்தும் அதனை தமிழர் தரப்பு நம்ப மறுக்கின்றது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்.சிதைந்த உறவினை மீளவும் கட்டியெழுப்புவோம் என்றார்.