January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியுடன் வெளிநாட்டு அமைச்சர் சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் காலித் கியாரி இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை வெளிநாட்டு அமைச்சில் சந்தித்தார்.

ஐ.நா. வின் அரசியல், சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் சமாதான நடவடிக்கைகளுக்கான உதவிச் செயலாளரான காலித் கியாரி இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ளார்.

இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரின் பக்க அம்சமாக இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பின் தொடர்ச்சியாக, இந்த விஜயம் உள்ளது.

இந்த சந்திப்பின் போது, தொற்றுநோய்க்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார சவால்கள் மற்றும் இலங்கையில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உட்பட, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக உள்நாட்டு செயன்முறைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றத்தை வெளிநாட்டு அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

இலங்கை தாமாக முன்வந்து ஏற்றுக்கொண்ட சர்வதேச கடமைகளுக்கு அமைவாக, நிலையான சமாதானத்தையும் அபிவிருத்தியையும் அடைந்து கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என அவர் குறிப்பிட்டார்.