இலங்கையில் இரத்தினக்கல் வியாபாரி ஒருவருக்கு மிகவும் அரிய வகை இயற்கையான பினாகைட் இரத்தினம் ஒன்று கிடைத்துள்ளது.
இதன் பெறுமதி 100 கோடி ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பேருவளையில் உள்ள இரத்தினக்கல் வியாபாரி ஒருவர் மாணிக்க கற்களை சேகரித்து விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் நாடு முழுவதும் இரத்தின கற்களை சேகரித்து தொழிலதிபர்களுக்கு விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் 4 கிலோவரை இரத்தினக்கற்களை சேகரித்து விற்பனை செய்ய முயன்ற போது, அதில் இருந்த ஒரு இரத்தினக்கல் படிகம் என கூறி வியாபாரிகளினால் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த வியாபாரி இரத்தினக்கல்லை ஆய்வு செய்ய அனுப்பி வைத்துள்ளார். ஆய்வு முடிவில் இரத்தினக்கல் மிகவும் பெறுமதிவாய்ந்த பினாகைட் என தெரியவந்துள்ளது.
இந்த மாணிக்கக்கல் இலங்கையில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பினாகைட் இரத்தினக் கற்களில் மிகப்பெரியது என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பலாங்கொடை பிரதேசத்தில் இருந்து ஒருவரிடம் இந்த வியாபாரி குறித்த இரத்தின கல்லை கொள்வனவு செய்துள்ளார்.
இதன் எடை 616.90 கரட் எனவும் இதன் விலை சுமார் 1 பில்லியன் ரூபா எனவும் வர்த்தகர் தெரிவித்தார்.
குறித்த வர்த்தகர் இது தொடர்பில் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு அறிவித்து அதற்கான சான்றிதழையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதுபோன்ற ரத்தினங்கள் ரத்தின சேகரிப்பாளர்களால் அதிக விலைக்கு வாங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.